?>
திருப்புத்தூரில் தனது திருமண நாளில் மாற்றுத் திறனாளிகள் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கி விருந்து படைத்த டிஎஸ்பி

29/08/2025 12:43:38pm.

திருப்புத்தூர் ஆக:22 சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில், காவல் துணை கண்காணிப்பாளர் செல்வகுமார் தனது திருமண நாளை முன்னிட்டு மனைவியுடன் வருகை தந்து உடல் மாற்றுத் திறனாளிகள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கி விருந்து வைத்து உபசரித்தார். திருப்புத்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செல்வகுமார் பல்வேறு இடங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஆய்வு மேற்கொண்டு வரும் பொழுது உடல் மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் பயிலும் மாணவிகளை பார்த்து, அதன் நிர்வாகிகளிடம் மாணவர்களின் தேவைகள் குறித்து விசாரித்துள்ளார். அப்பொழுது பள்ளி மாணவர்களுக்கு சீருடை கிடைத்தால் நன்றாக இருக்கும் என நிர்வாகிகள் கூறிய நிலையில் ஒரு மாணவ மாணவிக்கு இரண்டு உடைகள் என 36 சீருடைகளை வழங்கி மதிய உணவும் பரிமாறினார். இதனையடுத்து அப்பள்ளி மாணவர்கள் காவல் துணை கண்காணிப்பாளரை மனதார பாராட்டியதோடு, அவர் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்து நன்றியும் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் திருப்புத்தூர் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். தனது திருமண நாளில் பள்ளி மாணவர்களின் தேவையறிந்து உதவிகள் செய்த டிஎஸ்பிஐ, மாணவர்களோடு சேர்ந்து பலரும் பாராட்டி வருகின்றனர்..