திருவைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி பெருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
29/07/2024 06:08:31pm.
திருப்புத்தூர் ஜூலை : 29 சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் அருகே வைரவன்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாகம்பிரியாள் அம்பாள் சமேத ஸ்ரீ திரு மெய்ஞானபுரீஸ்வரர் திருக்கோயிலில் தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கும் ஸ்ரீமூல பால கால பைரவர் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமி பெருவிழா நடைபெற்றது. பழமையான, பிரசித்தி பெற்ற இக்கோயிலில் நடைபெறும் தேய்பிறை அஷ்டமி யாகவிழா சிறப்பு வாய்ந்ததாகும். பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும். அன்றைய தினம் அஷ்டலட்சுமிகளும் வழிபடுவதாக புராண, சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் தான் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி கொடுத்தனர். அதனடிப்படையில் ஆடி மாதத்தில் நேற்று நடைபெற்ற இந்த தேய்பிறை அஷ்டமி விழாவையொட்டி இக்கோயில் மூலவரான ஸ்ரீமூலபாலகால பைரவர் தங்க கவசத்தில் எழுந்தருளினார். இந்த அஷ்டமி விழாவை முன்னிட்டு மகா கணபதி பூஜை, தீபாராதனைகள், மகா பைரவயாகம் தொடங்கப்பட்டு பின்பு கோ பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நெய், வஸ்திரம், மற்றும் புஷ்பயாகத்தை தொடர்ந்து மகாபூர்ணாகுதியும் பிரம்மாண்டமாக நடைபெற்று, பின்பு யாகத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் குடத்திற்கு அடுக்கு தீபம், பஞ்சமுக தீபம், கும்ப தீபம், நாக தீபம், ஒற்றை தீபம் மற்றும் கற்பூர தீபம் உட்பட பல்வேறு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாம்பல் பூசணியில் விளக்கேற்றி பைரவரை தரிசனம் செய்தனர். பாஜக தேசிய செயலாளர் சுதாகர் ரெட்டி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார், விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் ரவிசந்திரன் மற்றும் மஹா ஸ்வாமி பீடம் பாண்டிராஜன் ஆகியோர் செய்திருந்தனர்..






