திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் குரு பெயர்ச்சி விழா. மேஷம் ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் மாறியதை அடுத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்.
02/05/2024 02:05:56pm.
சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகேயுள்ள பட்டமங்கலம் தட்சணாமூர்த்தி கோயிலில் குருபெயர்ச்சி விழாவையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருப்புத்தூர் அருகே பட்டமங்கலத்தில், மீனாட்சி சுந்தரேசுவரர் அஷ்டமாசித்தி தட்சணாமூர்த்தி திருக்கோயில் உள்ளது. குருபகவானான தட்சணாமூர்த்தி கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளது இக்கோயிலின் சிறப்பாகும். ஆக்கல், காத்தல், அழித்தல், ஆகிய தெய்வமான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஒரே இடத்தில் கூடி கார்த்திகைப் பெண்களுக்கு பாவ விமோசனம் கொடுத்ததால் இங்கு குரு பகவானுக்கு நடைபெறும் யாகம் மற்றும் குரு பெயர்ச்சிகளில் பங்கு பெறுவதன் மூலம் பல நற்பலன்கள் கிடைக்கும் என்று பலர் கூறுகின்றனர். நவக்கிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் நேற்று மாலை 5.21 மணிக்கு, மேஷம் ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார். அதனையடுத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர், தட்சணாமூர்த்தி சந்தனக் காப்பு அலங்காரத்தில், வெள்ளி அங்கியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து, உற்சவர் 6 கார்த்திகைப் பெண்கள், 4 முனிவர்களுடன் கற்பக விருட்சத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். குரு பெயர்ச்சி நேரத்தில் மூலவருக்கு பன்முக தீபாராதனை நடைபெற்றது. அதே நேரத்தில் உற்சவர் மற்றும் கோயில் கோபுரங்களுக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு மகாதீபம் காட்டப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு, சுற்று வட்டாரப் பகுதி மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குரு பகவானை தரிசனம் செய்தனர். அதிமுக சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளர் சேவியர் தாஸ் குரு பகவானை அகல்விளக்கேற்றி தரிசனம் செய்தார். விழா ஏற்பாடுகளை, கோயில் பரம்பரை அறங்காவலர் ராம.வீரப்பச் செட்டியார் குடும்பத்தினர் செய்திருந்தனர்..






