?>
திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலுக்கு 25வது ஆண்டாக பால்குடம், பூத்தட்டுகள் சுமந்து வந்த பக்தர்கள் அம்மனுக்கு அபிஷேகம் செய்து, பூச்சொரிந்து வழிபாடு

02/05/2024 02:03:23pm.

திருப்புத்தூர் மே:01 சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் அமைந்துள்ள பூமாயி அம்மன் கோயிலில் சித்திரைப் பூத்திருவிழாவையொட்டி கணேஷ் நகர் பகுதி மக்கள் 25 வது ஆண்டாக பால்குடம், பூத்தட்டு சுமந்து வந்து பூமாயி அம்மனை தரிசனம் செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் நடைபெறும் இக்கோயில் புகழ்பெற்ற பூத்திருவிழாவை, திருப்புத்தூர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் பிரம்மாண்டமாக கொண்டாடுவர். அதனை தொடர்ந்து இக்கோயிலில் வசந்தபெருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதே போன்று இந்த ஆண்டும் பூத்திருவிழா மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து 10 நாள் விழாவாக நடைபெற்று வரும் பூமாயி அம்மன் கோயில் வசந்த பெருவிழாவில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதிகளில் இருந்தும் பால்குடம், பூத்தட்டுகள், முளைப்பாரி, மதுகுடங்கள் சுமந்து பூமாயி அம்மனுக்கு படைத்திட்டு அருள் பெற்று செல்கின்றனர். அதன் அடிப்படையில், வசந்த பெருவிழாவின் 3 வது நாள், 25 வது ஆண்டாக மேள தாளங்கள் முழங்க கணேஷ்நகர் பகுதி மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் பால்குடம், பூத்தட்டுகள் சுமந்து புதுக்கோட்டை ரோடு, நான்கு ரோடு, தேரோடும் வீதி, கண்டமாணிக்கம் ரோடு வழியாக ஊர்வலமாக வந்து பூமாயி அம்மன் கோயில் வந்தடைந்தனர். பின்பு பக்தர்கள் கொண்டு வந்த பால் உட்பட 16 வகையான திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு சிறப்பு அலங்காரத்தில் தோன்றிய பூமாயிஅம்மனுக்கு பூக்களால் பூச்சொரிதல் நடைபெற்றது. அதன் பின்பு தீபாராதனை காட்டப்பட்ட அம்மனுக்கு படைக்கப்பட்ட பூக்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன..