?>
புதுப்பட்டியில் 16 முகம் கொண்ட அகத்தீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா

11/03/2021 06:52:56pm.

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் புதுப்பட்டியில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 108 சங்காபிஷேகம், 108 கலச அபிஷேகம், லிங்கோத்பவ பூஜை மற்றும் வருஷாபிஷேக ஹோமம் ஆகியவை நடைபெற்றது. திருப்புத்தூர் புதுப்பட்டி அகத்தீஸ்வரர் ஆலயத்தில் 16 முகங்களை கொண்ட சோடஷலிங்கம் வாஸ்து பேறு அருளக்கூடிய பூமிநாதராக எழுந்து, உமையாம்பிகை சமேத ஶ்ரீ அகத்தீஸ்வரராக அருளாட்சி செய்து வரும் அகத்தீஸ்வரருக்கு மகாசிவராத்திரியை முன்னிட்டு கடந்த மார்ச் 2ம் தேதி அன்று காப்புக் கட்டுதலுடன் விழா துவங்கி பக்தர்கள் விரதமிருந்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சுவாமி உற்சவர் திருவீதி உலா நடைபெற்றது. மகா சிவராத்திரி நாளான நேற்று மாலை ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து வருஷ அபிஷேக ஹோமம், விக்னேஸ்வர பூஜையுடன் சிவராத்திரி ஹோமம் தொடங்கியது. தொடர்ந்து உற்சவருக்கு 108 சங்காபிஷேகம், 108 கலசாபிஷேகம் மற்றும் லிங்கோத்பவ பூஜை கிருஷ்ணமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். மாலை 6 மணிக்கு உற்சவருக்கு நடைபெற்ற பாலாபிஷேகத்தில் 108 சங்கில் வைக்கப்பட்டிருந்த பால் மற்றும் பக்தர்களின் பால்குட பால் கொண்டு அபிஷேகமும் 108 கலசங்களில் உள்ள புனித நீரினாலும் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சாமி புறப்பாடும் அன்னதான நிகழ்வும் நடைபெற்றது. தொடர்ந்து மகாசிவராத்திரியைக் குறிக்கும் வகையில் இரவு 9.30 மணிக்கு முதல்கால பூஜையும் இரவு 12.30 மணிக்கு 2ம் கால பூஜையும், நள்ளிரவு 3.30 மணிக்கு 3ம் கால பூஜையும் அதிகாலை 5.30 மணிக்கு 4ம் கால பூஜையும் நடைபெற்றது. இப்பூஜைகளில் வேதமந்திரஜெபம், தேவாரபாராயணமும் முதலியவை வாசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பக்தி செம்மல் இராசா.ராஜசேகர், இராகீ ஷக்தி லம்போதர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகளை விழாக் குழு மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்..