?>
திருப்புத்தூர் அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட கிராமத்தினர்.

28/09/2023 07:27:17pm.

திருப்புத்தூர் அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட கிராமத்தினர். போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின்பு கலைந்து சென்றனர்.
 
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள காட்டம்பூர் கிராமத்து மக்கள் திருப்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தங்கள் கிராமத்தில் குடிதண்ணீர், மின்விளக்கு, சாலை வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தீர்த்து வைக்க கோரி இந்த சாலை மறியலில் ஈடுபட்டனர் பெண்கள் தண்ணீர் குடத்துடன் வந்து சாலைகளில் நின்று மறியலில் ஈடுபட்டது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருக்கோஷ்டியூர் போலீசார் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து மண்டலத்து துணை வட்டாட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் மக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பின்பு போலீசார் மற்றும் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் உடன்பட்டு கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர். இது தொடர்பாக கிராம மக்கள் கூறுகையில் தங்கள் கிராமத்தில் 20 நாட்களுக்கும் மேலாக குடி தண்ணீர் வரவில்லை, குளத்திலும் தண்ணீர் இல்லாததால் குடிப்பதற்கு மிகுந்த சிரமமாக உள்ளது. தெருவிளக்கும் இரவு நேரத்தில் எரியாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். இந்நிலையில் இக்கிராமத்திற்கு செல்லும் வழியாக தேசிய நெடுஞ்சாலை போடப்பட்டு வருவதால் கிராமத்துக்கு செல்லும் சாலைகளும் குண்டும் குழியுமாக இருப்பதாகவும் வேதனையோடு கூறினர். இது தொடர்பாக திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக அலுவலர், வருவாய்த்துறை அதிகாரிகள் என பலரிடம் புகார் அளித்துள்ளோம் ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க அவர்கள் முன் வரவில்லை எனவும் குற்றம் சாட்டினர்.
 
.