திருப்பத்தூர் அருகே வினோத திருவிழா கொடிய நோயிலிருந்து பாதுகாக்க அம்மனுக்கு செவ்வாய் பொங்கல் வைத்து வழிபாடு
01/03/2023 07:04:31pm.
திருப்பத்தூர் அருகே வினோத திருவிழா. கொடிய நோயிலிருந்து பாதுகாக்க அம்மனுக்கு செவ்வாய் பொங்கல் வைத்து வழிபாடு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கம், பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சுற்றுப்பொங்கல் வைத்து வழிபட்டனர். கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சி அம்மன் கோவில் வாசல் முன்பு சுற்று பொங்கல் என்ற பெயரில் மாசி மாதம் 3 செவ்வாய் கிழமைகளில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனர். முன்பொரு காலத்தில் காலரா, அம்மை, மஞ்சள் காமாலை உள்ளிட்ட கொடிய நோய்களிடம் இருந்து தங்களைப் பாதுகாக்க கிராம தெய்வமான மாணிக்கநாச்சி அம்மனிடம் வேண்டி இந்த பொங்கல் விழாவை நடத்தி வந்ததாக கிராம மக்கள் கூறுகின்றனர். இதனையடுத்து முனியய்யா கோவில் சவுக்கை சாமி அழைத்து அங்கிருந்து தெற்கு ஊரணி போய் வழிபாடு செய்து, அதன்பின்பு கரகத்தை சுமந்து ராஜவீதி, காளாங்கரை வீதி, சிவன் கோவில் வீதி, இடும்பன் வீதி உட்பட ஊர் முழுவதும் வீதிகளை சுற்றி சாமியாடி கரகம் சுமந்து சென்றார்.
வழி நெடுகிலும் பக்தர்கள் மலர் மாலை, துண்டுகள், வேஷ்டிகள் அணிவித்து வழிபட்டனர். பின்பு கோவில் வளாகத்தில் சுமார் 250 க்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். மூன்று வாரங்கள் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில், முதல் வாரம் வெண்பொங்கல், இரண்டாவது வாரம் சர்க்கரை பொங்கல், மூன்றாவது வாரம் வெண்பொங்கல் மற்றும் சர்க்கரை பொங்கல் வைத்து வழிபட்டனர். அதன் பின்பு சாமியாடி முனியய்யா சவுக்கையில் வழிபாடு நடத்திவிட்டு கிடாய் பலியிட்ட பின் பொங்கல் வைத்த பெண்கள் சேவல், கோழி ஆகியவற்றிற்கு மஞ்சள் நீர் தெளித்து பலியிட்டனர். பின்பு சாமியாடி கரகத்தை தூக்கி சென்று பொன்னாங்குடி ஆற்றில் கரகத்தை கரைத்தனர். முன்பு ஒரு காலத்தில் தொற்று நோய்களுக்காக வைக்கப்பட்ட சுற்றுப் பொங்கல் தற்பொழுது நூற்றாண்டுகளை கடந்தும் இன்றும் இப்பகுதி மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருவது தமிழக மக்கள் பழமையான பாரம்பரியத்தையும், பழக்க வழக்கங்களையும் இன்றளவும் பின்பற்றி வருகிறார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது.
.






