சிங்கம்புணரி அருகே வேங்கைபட்டி அரசு நடுநிலைப்பள்ளி உள்பகுதி மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் சுக்குநூறாக உடைந்த நாற்காலி. உயிர் தப்பிய ஆசிரியர், மாணவர்கள்
12/10/2022 07:40:03pm.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள வேங்கைபட்டி நடுநிலைப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 142 மாணவர்கள் படித்து வருகின்றனர். மூன்று கட்டிடங்களில் பள்ளி இயங்கிய நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கட்டிடம் பழுதடைந்து யாரும் உள்ளே செல்லாதபடி எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. ஒரு கட்டிடம் பழுதடைந்த நிலையில் மீதமுள்ள இரண்டு கட்டிடங்களில் நெருக்கடிக்கு மத்தியில் வகுப்புகள் நடந்து வந்தது. காலண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் துவங்கிய நிலையில் பள்ளியை சுத்தம் செய்ய தூய்மை பணியாளர் ஒரு பள்ளியின் கட்டிடத்தை திறந்துள்ளார். திறந்து பார்த்தபோது ஆசிரியர் இருக்கைக்கு மேலே இருந்த மேற்கூரை பெயர்ந்து விழுந்து நாற்காலிகள் சுக்கு நூறாக உடைந்து கிடந்ததை கண்டு தூய்மை பணியாளர் அதிர்ச்சி அடைந்தார்.
நல்வாய்பாக வகுப்பறை நேரத்தில் மேற்கூரை விழுந்திருந்தால் ஆசிரியர், மாணவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும் இந்த மேற்கூரை பள்ளி திறக்காத நேரத்தில் விழுந்ததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. தூய்மை பணியாளர்
உடனே தலைமை ஆசிரியருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தலைமை ஆசிரியர் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து வந்த மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சிவராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமண ராஜூ ஆகியோர் இன்று பள்ளியின் தரம் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் அங்கு இருந்த பொதுமக்கள் பள்ளி கட்டி சில ஆண்டுகளிலே கட்டிடம் இடிந்துள்ளது. பள்ளியில் விபரீதம் ஏற்பட்டால் தான் அரசு அதிகாரிகள் வருவார்கள். இதற்கு முன் மனு கொடுத்தும் எந்த அதிகாரிகளும் வரவில்லை . தரமில்லாமல் பள்ளி கட்டிடம், பால்வாடி கட்டிடம் அனைத்தும் தரமில்லாமல் உள்ளது. பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப பயமாக உள்ளதாகவும், தரமாக கட்டிடங்களை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
.






