திருப்பத்தூரில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம்
14/07/2021 04:32:37pm.
செய்தியாளர் வினாயகமூர்த்தி.k
திருப்பத்தூர் மாவட்ட கூட்ட அரங்கில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் அமர்குஷ்வாஹா துவக்கி வைத்தார்.
அதனையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் விழாவில் பேசியபோது திருப்பத்தூர் மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகள் குறித்த சரியான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் நல திட்டங்கள் முறையாக அவர்களுக்கு சென்றடையும். சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பணிகளை விரைவாக செய்து முடிக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவர்களும் முறையாக ஒத்துழைப்பு செய்து உரிய ஆவணங்களுடன் சென்று தங்களுக்குரிய அலுவலகத்தில் சலுகைகளை பெற்றுக்கொள்ள வழிவகை செய்து கொள்ள வேண்டும். தற்போது திருப்பத்தூர் மாவட்டம் புதியதாக ஆன நிலையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்க உள்ளது. தங்களின் குடும்ப வாழ்வாதாரத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் சமூக சேவை ஆற்றும் நோக்கோடு இருக்க வேண்டும். பொது மக்களிடம் நன்மதிப்பை பெற்று வேலைவாய்ப்பில் அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது. மூன்றாம் பாலினத்தவர்கள் ஒன்றாக சேர்ந்து சங்கத்தின் மூலமாக தலைவரை தேர்ந்தெடுத்து அதன் மூலமாக தங்களின் கோரிக்கைகளை தமிழக அரசிற்கும் மாவட்ட அலுவலகத்திலும் அளிக்கும் பட்சத்தில் அந்த மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 5-ம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை படித்து முடித்த நிலையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 வருடங்களுக்கு மேலாக இருந்தால் அவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தினை தொடர்பு கொள்ள வேண்டும். கல்வி முன்னுரிமை, அரசு அடையாள அட்டை பெறுவது, இலவச பேருந்து அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகள் ஆகியவற்றை தாங்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழக அரசின் சார்பில் சுய தொழில் தொடங்குவதற்கும் அறக்கட்டளை சமூக சேவை மையம் துவங்குவதற்கும் பல்வேறு உதவிகளை மாவட்ட நிர்வாகம் வழிகாட்டி வருகின்றது. மூன்றாம் பாலினத்தவர்கள் சுயமாக தொழில் தொடங்குவதற்கும் ஆடு மாடு மேய்ச்சல் வளர்ப்பதற்கும் மானிய கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடர்பு கொள்ள 299099 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டு பேசினார். இந்நிகழ்வில் மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், மாவட்ட வழங்கல் அலுவலர் செண்பகவள்ளி, தாலுகா வட்ட வலங்கள் அலுவலர் கண்ணன், மாவட்ட தொழில் மையம் ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த சிறப்பு முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் பயனடைந்தனர்.






