மகிபாலன்பட்டி ஊராட்சியில் குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தில் கூடுதல் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி!
09/06/2021 06:18:25pm.

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தாலுகா மகிபாலன்பட்டி ஊராட்சியில் குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தில் கூடுதல் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் முன்னிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜஹாங்கீர் துவங்கி வைத்தார். நாடு முழுவதும் மரக்கன்றுகளை நடுவதற்கும், இருக்கின்ற மரங்களை பராமரிப்பதற்கும் அரசு பல்வேறு முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. "மரம் இருந்தால்தான் மழை" என்ற தத்துவத்தின் அடிப்படையில் மரங்களின் அவசியத்தையும், அதன் பயன்களையும் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பசுமை புரட்சி, குறுங்காடுகள் அமைத்தல், என பல்வேறு திட்டங்களை அரசு வழி நடத்தி வருகிறது. அதனடிப்படையில் குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தில் ஒன்றியத்துக்கு உட்பட்ட 40 பஞ்சாயத்துகளில் முதல்கட்டமாக மகிபாலன்பட்டி ஊராட்சியில் நாட்டுப் பூவரசு, தேக்கு, வேம்பு , சவுக்கு, புளி, புங்கை, என பலதரப்பட்ட மரக்கன்றுகளை சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் பென்சிங் (தடுப்பு வேலி) அமைக்கப்பட்ட இடத்தில் ஒரு மீட்டர் ஆழத்திற்கு ஜேசிபி இயந்திரம் மூலம் மணல் அள்ளப்பட்டு அதனுள் மக்கும் குப்பைகள் மற்றும் இயற்கை உரங்களை இட்டு அதன் மேற்பரப்பில் சுமார் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை 100 நாள் திட்டத்தில் பணியாற்றும் பெண்களின் உதவியோடு மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் நடப்பட்ட மரக் கன்றுகளை முறையாக பராமரிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய ஓவர்சீஸ் பொறுப்பாளர் பெரியசாமி, ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் சேகர், செயலாளர் உமா மற்றும் பலர் கலந்து கொண்டனர்
.