?>
மாஸ்டரின் வெற்றிக்கு விஜய் சார் மட்டுமே காரணம் : விஜய் சேதுபதி

26/01/2021.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜனவரி 13-ம் தேதி வெளியான படம் 'மாஸ்டர்'. இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று, வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. இந்தப் படம் தொடர்பாக விஜய் சேதுபதி பேட்டி எதுவும் அளிக்கவில்லை. பல்வேறு படப்பிடிப்புகள் இருந்ததால், 'மாஸ்டர்' படத்தின் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
 
தனியார் நிறுவனம் ஒன்றின் திறப்பு விழாவில் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் விஜய் சேதுபதி பேசியதாவது:
 
"விஜய் சார், தமிழக அரசு, லோகேஷ் கனகராஜ் மற்றும் தமிழக மக்கள் அனைவருக்கும் ரொம்ப நன்றி. ஏனென்றால் மக்கள் திரும்பவும் திரையரங்கிற்கு வரத் தொடங்கியுள்ளார்கள். இது பலருக்கு திரும்பவும் வாழ்க்கையையும், நம்பிக்கையையும் தொடங்கி வைத்துள்ளது. 'மாஸ்டர்' படம் இப்படி வந்ததற்கு விஜய் சார் மட்டுமே காரணம்".
 
இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.
 
அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விஜய் சேதுபதி பதிலளித்தார்.
 
விஜய் சேதுபதி படம்தான் மாஸ்டர் என்கிறார்களே?
 
இந்தக் கேள்வியே அவசியமில்லாத கேள்வி. விஜய் சாரால் மட்டுமே அந்தப் படம் சிறப்பாக வந்துள்ளது.
 
'துக்ளக் தர்பார்' படமும் சர்ச்சையில் சிக்கியதே?
 
இனிமேல் கதையைச் சொல்லிவிட்டுத்தான் படம் எடுக்க முடியும். அந்தப் படம் வந்தால்தானே என்ன கதை என்றே தெரியும். பிரச்சினை பண்ண வேண்டும் என்றா படம் எடுப்போம். மக்களை ரசிக்க வைக்க வேண்டும் என்றுதான் படம் எடுக்கிறோம். அந்த மாதிரி சர்ச்சைகள் எல்லாம் எங்களுக்குத் தேவையற்றவை.
 
'800' படம் குறித்து?
 
பல முறை சொல்லிவிட்டேன். இறந்துபோன செய்தியை ஏன் நோண்டுகிறீர்கள். அதில் ஒன்றுமே இல்லை என்று விளக்கம் சொல்லி முடித்துவிட்டேன். கதைகள் பண்ணுவதற்கே நேரமில்லையாம். நாங்கள் பிரச்சினை வேற பண்ணுவோமா?
 
இவ்வாறு விஜய் சேதுபதி தெரிவித்தார்.
.